கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 20-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 7 லட்சத்து 28 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 31 ஆயிரத்து 525 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக கடந்த ஒரு வாரமாக சராசரி பாதிப்பு 300 ஆக உள்ளது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனையை அதிகப்படுத்தி உள்ளனர். அதாவது மருத்துவமனைகளுக்கு தொடர்ந்து 2 நாட்கள் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் அறுவை சிகிச்சை செய்ய உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்த பிறகே, தொற்று இல்லை என்ற சான்றிதழ் வந்த பின்பு தான் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதனால் அறுவை சிகிச்சை செய்ய உள்ளவர்களும் கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவமனைகளுக்கு படையெடுக்கின்றனர்.அந்த வகையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்காக குவிந்தனர். பின்னர் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களிடம் இருந்து ஆஸ்பத்திரி ஊழியர்கள், உமிழ்நீர் எடுத்து கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காகவும் நேற்று பொதுமக்கள் பலர் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.