2016 க்கு பிறகு செயல்திறன், நிதி மேலாண்மை திறன் இல்லாத அரசாக இருந்துவிட்டு தற்போது எங்களை குறை சொல்வது தவறானது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் குற்றச்சாட்டிற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
மதுரை மத்தியத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் கணேசபுரம் தெருவில் 8.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலையை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வளர்ச்சி, நிதி மேலாண்மை முக்கியம் என்ற போதிலும் மனிதாபிமானம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு முகாம்கள் அமைத்து அவர்கள் நலனுக்கு மும்முரமாக பணியாற்றி வருகிறோம் எனக் கூறினார்.
லஞ்ச ஒழிப்புத் துறையில் பல்வேறு வழக்குகள் குவிந்து வருவதாக கூறிய அவர், அதனை பொதுவெளியில் சொல்ல முடியாது விரைவில் சம்பத்தப்பட்டவர்கள் விளைவுகளை சந்திப்பார்கள் எனக் கூறினார். தேவையற்ற விவாதங்களை உருவாக்கும் பொய்யான தகவல்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசி வருகிறார். மின்சார கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வும் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனை கடந்த ஆண்டு நிதி பற்றாக்குறையுடன் ஒப்பிட்டு பேசுவது அடிப்படை புரிதல் இல்லாதது என்று தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் வருவாய் பற்றாக்குறை இல்லாத சராசரி மாநிலமாக இருந்தது. 2016 க்கு பிறகு செயல்திறன், நிதி மேலாண்மை திறன் இல்லாத அரசாக இருந்துவிட்டு தற்போது எங்களை குறை சொல்வது தவறானது. மத்திய அரசின் பொது நிதியில் இருந்து பெரும் கடன் தொகையை கடந்த ஆட்சியில் எல்லை மீறி 30,000 கோடிக்கு மேல் சுருட்டி கொண்டனர். கூட்டணி கட்சி என்ற முறையில் மோடி இவர்களை கேள்வி கேட்கவும் இல்லை, தண்டிக்கவும் இல்லை. கடந்த அதிமுக அரசு நிலுவையில் வைத்திருந்த 62,000 கோடி வருவாய் பற்றாக்குறையை 47,000 கோடியாக குறைத்துள்ளோம்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்களே இந்த ஆட்சியில் நிதி மேலாண்மை சரி இல்லை என்று உதயகுமாரிடம் குறை சொல்கிறார்கள் என்று சொல்வது நம்பகத்தன்மையற்றது. பொய்யான தரவுகள், அடிப்படை புரிதல் இல்லாதவற்றை மக்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் வெளியிடுவது சரியானது இல்லை. பெண்களுக்கு இலவச பஸ் பயணம், பொங்கல் பரிசு, காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். மாநில அரசின் நிதி கொண்டு சமூகநீதிக்கு உட்பட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.