மயிலாடுதுறை கொள்ளிடம் அருகே விளை நிலங்களை உப்புநீர் சூழ்ந்துள்ளது. இந்த பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். உப்பனாறு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழவனாறு செல்கிறது. இந்த ஆற்றில் கூடுதலாக வரும் தண்ணீர் தேனூரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் உப்பனாற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். உப்பனாறு வடிகால் ஆறாகும். இந்த ஆற்றில் செல்லும் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமாக காணப்படுகிறது.
திருமுல்லைவாசல் பகுதியில் கடலில் கலக்கும் உப்பனாற்றில் திருநகரி -ராதாநல்லூர் இடையே கதவணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விளைநிலங்களில் உப்புநீர் :இதன் காரணமாக உப்பனாற்றின் குறுக்கே மணல் குவியலாக காட்சி அளிப்பதால் தேனூர் கதவணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வடிந்து செல்ல வழியின்றி எடமணல் கிராமம் காருவேலி, திருக்கருகாவூர் பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் புகுந்து விட்டது.
உப்பனாற்றின் கரையோர பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக நேரடி நெல் விதைப்பு செய்து இருந்தனர்.
கோரிக்கை: நேரடி நெல் விதைப்பு செய்து 20 நாட்களான நிலையில் விளைநிலங்களை உப்புநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து எடமணல் கிராமத்தை சேர்ந்த விவசாயி சம்பத் கூறுகையில், ‘நேரடி நெல் விதைப்பு செய்த வயல்களை உப்புநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருநகரி உப்பனாற்றில் கதவணை கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதன் காரணமாக தண்ணீர் வடிய வழியின்றி வயல்களை உப்புநீர் சூழ்ந்துள்ளது. நிவாரணம் இனிவரும் காலங்களில் உப்பு நீர் விளை நிலங்களுக்குள் புகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது இந்த பகுதியில் கடந்த 6 நாட்களாக தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் நேரடி நெல் விதைப்பு செய்த நெல் விதைகள் அனைத்தும் அழியும் நிலையில் உள்ளது. இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தேங்கிய தண்ணீரை வடிய வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.