கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டரிடம் மனு அளிக்க வந்த 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷபாட்டிலை எடுத்து, கலெக்டர் முன்பு குடிக்க முயன்றார். இதை பார்த்த அங்கிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அவரை தடுத்து, அவரது கையில் இருந்த விஷபாட்டிலை பிடுங்கினர்.
பின்னர் போலீசார், அந்த பெண்ணை கூட்ட அரங்கில் இருந்து வெளியே அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பண்ருட்டி அருகே உள்ள பொன்னங்குப்பத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி கெஜலட்சுமி (வயது 47) என்பது தெரியவந்தது. மேலும், அதே பகுதியில் உள்ள பொது வழிப்பாதையை தனிநபர்கள் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்துள்ளனர். அதனால் கெஜலட்சுமி, தனது ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக அவ்வழியாக அழைத்து செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தனிநபர்களை தட்டிக்கேட்ட போது அவர்கள் ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் நிலையம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கலெக்டர் முன்பு விஷம் குடிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கலெக்டரிடம் மனு அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.