காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரியில் இருந்து கேரளா வழியாக தற்போது கர்நாடகத்திற்கு அவர் வந்துள்ளார். மாண்டியாவில் இன்று காலை தொடங்கிய நடை பயணத்தில் ராகுலுடன் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பங்கேற்றார்.
தசரா விழாவையொட்டி 2 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், நடை பயணம் மீண்டும் தொடங்கியது.
இந்த நடை பயணத்தில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை மைசூரு வந்தார் சோனியா. முன்னதாக, பேகுர் கிராமத்தில் அமைந்துள்ள பீமன்கொல்லி கோயிலிலும் அவர் வழிபாடு செய்தார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், “கர்நாடகத்தில் சாலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா நடக்கிறார் என்பது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயமாகும். விஜய தசமியை தொடர்ந்து கர்நாடகத்தில் விஜயம் வரும். நாங்கள் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்போம்” என்றார்.
தினமும் 24 கி.மீ. தொலைவு நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது. 5 மாதங்களில் 12 மாநிலங்களை கடக்க திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மட்டும் 21 நாட்கள் நடை பயணம் மேற்கொள்கிறார் ராகுல்.