தரங்கம்பாடி, செப்-08: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சங்கரன்பந்தல் இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதை வலியுறுத்தி கிராம மக்கள் வாலியில் கழிவு நீரை எடுத்து மாலை அணிவித்து சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
காவிரியாற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான வீரசோழன் ஆறு சங்கரன்பந்தல் வழியாக சென்று தரங்கம்பாடி கடலில் கலக்கிறது. இந்நிலையில் சங்கரன்பந்தல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், மீன் மற்றும் இறைச்சி கடைகள் உள்ளிட்ட வணிக வளாகங்களில் உள்ள கழிவுநீர்களும் வீரசோழன் ஆற்றில் விடப்படுகிறது. இதனால் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆற்று நீர் மாசுபட்டு கருப்பு நிறமாக மாறி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆற்றில் கழிவுகள் கலப்பதை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக துர்நாற்றம் வீசுவதோடு, ஆற்று நீர்முழுவதும் கருப்பு நிறத்தில் மாறி மீன்கள், நத்தை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதப்பதோடு துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் சங்கரன்பந்தல், உத்திரங்குடி, ஓலக்குடி, பத்தம், விசலூர், சேந்தமங்கலம், முனிவலங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளிலும், நிலங்களிலும் கழிவு நீர் கலந்த ஆற்றுநீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீரை முழுமையாக வெளியேற்ற சாலை மறியல் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) செயற்பொறியாளர் சண்முகம், பொறியாளர் விஜயபாஸ்கர், சீனிவாசன், வட்டாச்சியர் புனிதா, செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் மஞ்சுளா, விஜயலெட்சுமி, பொறையார் காவல் ஆய்வாளர் சிங்காரவேலு ஆகியோர் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கழிவுகள் கலந்துள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
உடனடியாக கழிவை வெளியேற்றுவதோடு கழிவுகளை கலப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து உத்திரங்குடி ஊராட்சி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
படவிளக்கம்;-1. வீரசோழன் ஆற்றில் கலந்துள்ள கழிவு நீர்,செத்துமிதக்கும் மீன்கள்,நத்தைகள்,
2.வீரசோழன் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்