இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் அதற்கு ஆதரவு தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று கேள்வி நேரத்துடன் கூடியது. அப்போது, எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்ககோரி அதிமுக எம்எல்ஏக்கள் முழக்கமிட்டனர். அப்போது, பேரவைக்கு முரண்பாடாக செயல்படுவதாக கூறி அவர்களை பேரவைத்தலைவர் அப்பாவு வெளியேற்ற உத்தரவிட்டார். பின்னர் அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தொடரில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது. பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழுவின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய நாட்டின் ஆட்சி, அலுவல் மொழியாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு பணி இனி இந்தி பேசும் மாநிலத்தவருக்கு மட்டும் என அறிவித்துவிட்டனர் என்றும் தெரிவித்தார். அதன் பின்னர் பல்வேறு உறுப்பினர்களும் இது தொடர்பாகப் பேசினர். ஓ.பன்னீர்செல்வம் பேசிய போது, தமிழ் மக்களை உயிருக்கும் மேலாக நேசித்தவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்றார். உயிர் போனாலும் கவலையில்லை. தமிழ் வாழ்ந்திட வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே இந்தித்திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது எனவே, இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்துக்கு தான் ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் அன்னைத் தமிழை மீறி இந்தித் திணிப்பை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், இந்தி திணிப்பு இருந்தால் அதை பாஜக கடுமையாக எதிர்க்கும் என்றார். மாநில சட்டங்கள், நீதிமன்ற தீர்ப்புகள் தாய்மொழியில் இருக்க வேண்டும் என்ற அவர், பிரதமர் மோடி என்றும் வட இந்திய மாநிலங்களில் இந்தி தெரியாத மாநிலத்தவர் ஆங்கிலத்தில் படிக்க முடியும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து இந்தி எதிர்ப்பு தீர்மானம் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.