தரங்கம்பாடி,அக்.19:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவிலில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கைது செய்ததை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக உதயகுமார் எம்எல்ஏ வை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்றத்தில் மனு அளித்தனர். இதனை ஏற்க மறுத்த சபாநாயகர் அப்பாவு சட்டமன்ற மரபுகளை மீறி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்து ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை கைது செய்தனர்.
அதனை கண்டித்து செம்பனார்கோவில், மேலமுக்கூட்டு, கடைவீதியில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். பவுன்ராஜ் தலைமையில், ஒன்றிய செயலாளர்கள் ஜனார்த்தனம், வி.ஜி.கண்ணன், மகேந்திராவர்மன், இளங்கோவன் ஆகியோரின் முன்னிலையில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த செம்பனார்கோவில் காவல்துறையினர் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளை கைது செய்து செம்பனார்கோவில் கீழ முக்கூட்டில் உள்ள அண்ணா திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்