மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆண்டுக்கு 100 பேரை ராணுவம் மற்றும் காவல் துறையில் பணியமர்த்தும் கனவுடன் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இந்திய துணை ராணுவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர் மயிலாடுதுறைச் சேர்ந்த பெத்தபெருமாள். பணி ஓய்வுக்குப் பின்னர் வீட்டில் முடங்கிவிடாமல் மயிலாடுதுறையில் ‘ காவலர் தொண்டர்கள் ‘ என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கி அதனை ஒருங்கிணைத்து ராணுவம் மற்றும் காவல் துறையில் சேர ஆர்வமுள்ள இளைஞர்களை அந்த அமைப்பில் இணைத்து அவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.
ஆரம்பத்தில் இவரிடம் சுமார் 25 இளைஞர்களே பயிற்சிக்கு சேர்ந்தபோதும், அவர்களுக்கு மனம் தளராது பயிற்சி வழங்கி வந்தார். இந்நிலையில் தற்போது 80 பெண்கள் உள்பட 200 பேர் தன்னார்வத்துடன் ராணுவம் மற்றும் காவல் துறையில் இணைய பெத்தபெருமாளிடம் பயிற்சி பெற்று வருகின்றனர். காலை 8 மணிக்கு பயிற்சி தொடங்கி மெதுவான ஓட்டம், வேகமான ஓட்டம்,உயரம் தாண்டுதல், தூரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் ஆகிய பயிற்சிகளை வழங்கி வருகிறார்.
அதன்பின் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மயிலாடுதுறை நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில், போக்குவரத்து காவலர்களுக்கு இந்த தன்னார்வ இளைஞர்கள் உதவி வருகின்றனர். மேலும், நகரிலுள்ள தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்புப் பணியிலும் காவல்துறையினர் இந்த இளைஞர்களை ஈடுபடுத்தியுள்ளனர். அண்மையில் நடைபெற்ற காவலர் தேர்வில் 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள், இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் தேர்வாகியுள்ளனர்.
ஆண்டுக்கு 100 பேரையாவது ராணுவம் மற்றும் காவல்துறை பணியில் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றி வரும் ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் இப்பணி, பலரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.