விண்ணில் பாய்ந்தது GSLV மார்க் 3 ரக ராக்கெட். முதல் முறையாக 6 டன் எடையுடைய ராக்கெட்டை வணிக ரீதியாக இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. எம்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கான கவுண்டன் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கியது. வணிகப்பயன்பாட்டுக்காக இந்த ராக்கெட் செயல்படுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. ஜி.எஸ்.எல்.வி. எம்-3 ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்டது. அதனை வடிவமைக்கும் பணிகளும், செயற்கைக் கோள்களை நிறுவும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, திட்டமிட்டப்படி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அதன்படி ஶ்ரீஹரிகோட்டவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, சரியாக 12:07 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி-எம் 3 விண்ணில் பாய்ந்தது. இதுவே இங்கிலாந்தின் 36 செயற்கை கோள்களை கொண்டு பயணிக்கும் முதல் GSLV ராக்கெட்டாகும். இதற்காக நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்துடன் இஸ்ரோ, இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
வணிக ரீதியான ராக்கெட் ஏவுதலில் 36 செயற்கைக்கோள்களை கொண்டு இஸ்ரோ பயணிப்பது இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது. இதுவரை 345 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. வணிக ரீதியாக ராக்கெட் ஏவுதலில், சந்தையில் இன்னொரு அடியை எடுத்து வைத்துள்ளது இந்தியா.
இதுவரை இஸ்ரோ செலுத்திய ராக்கெட்டுகளை விட, வணிக ரீதியிலான பயன்பாட்டில் இங்கிலாந்துடன் ஒப்பந்தம் போடபட்டு பயணிக்கும் முதல் அதிக எடை கொண்ட ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது GSLV M3. GSLV மார்க் 3 ரக ராக்கெட்டால் 10 டன் எடைவரை சுமந்து செல்ல இயலும். இந்தமுறை இங்கிலாந்தின் ஒன் வெப் நிறுவனத்தில் 36 செயற்கை கோள்களை எடுத்து செல்கிறது GSLV M3.
இந்த 36 செயற்கைகோள்களின் எடையும் 6 டன் (5,796 kl) இருக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. 6 டன் எடையுள்ள இந்த 36 பேலட் செயற்கைகோள்களை 601 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புவியின் குறுகிய சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வணிக பயன்பாட்டிற்காக இஸ்ரோ PSLV ரக ராக்கெட்டுகளை தான் பயன்படுத்தி வந்தது. அதன் எடை சுமார் 1.7 டன் மட்டுமே. ஆனால் இந்தமுறை வணிக பயன்பாட்டிற்காக GSLV மார்க் 3 ரக ராக்கெட்டை 6 டன் எடையுடன் பயன்படுத்தி உள்ளது இஸ்ரோ.