இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, பிரிட்டனின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இயலாமல் பதவி விலகினார். இதனால் பிரிட்டன் வரலாற்றில் மிக குறுகிய காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெயரை லிஸ் ட்ரஸ் பெற்றார். இதனையடுத்து நடைபெற்ற கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் வெற்றி பெற்றார். அவர் கன்சர்வேடிவ் எம்.பி.க்களில், பாதிக்கும் மேற்பட்டோரின் ஆதரவைப் பெற்ற நிலையில், அவரது போட்டியாளரான பென்னி மோர்டான்ட், தலைமைக்கான போட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் இன்று இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸை ரிஷி சுனக் சந்தித்தார். பிரிட்டனில் புதிய நிர்வாகத்தை அமைக்க மன்னர் சார்லஸ் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, பிரிட்டனின் பிரதமராக ரிதி சுனக் பொறுப்பேற்றுக் கொண்டார். பிரிட்டனின் 57வது பிரதமராக தேர்வான இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரிட்டன் பிரதமராவார்.
பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட ரிஷி சுனக், பிரிட்டன் மக்களின் நம்பிக்கையைப் பெறுவேன் என்றும், நான் பேசுவதை விட எனது செயல்கள் பேசும் என்றும் தெரிவித்துள்ளார்.