2021-22-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். பயிர் காப்பீடு துறையில் தனியார் நிறுவனங்களை வெளியேற்றி, அரசுத்துறை நிறுவனங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான மாவட்ட அலுவலகத்தை கடலூரில் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், மாவட்ட துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, இணை செயலாளர்கள் கற்பனைச்செல்வம், வாஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் மகாலிங்கம், லோகநாதன், நிர்வாகிகள் மூர்த்தி, கடவுள், வெங்கடேசன், மெய்யழகன், ஜெகதீசன், கோவிந்தராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.