மயிலாடுதுறை ரயில் நிலையம் தற்பொழுது அதிக எண்ணிக்கையிலான ரயில்கள் வருகை தரும் ஜங்ஷனாக உயர்ந்து இருப்பதால் ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கனிசமாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது. மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனிலிருந்து, திருச்செந்தூர், ராமேஸ்வரம், கன்னியாக்குமரி, நாகர்கோவில், செங்கோட்டை, திருவனந்தபுரம், மதுரை,திருச்சி, காரைக்குடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், வட இந்தியாவின் புண்ணிய ஸ்தலங்களாக போற்றப்படும் வாரணாசி, அயோத்தி மும்பை, புவனேஸ்வர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் ரயில்கள் ஆன்மீக ரீதியாகவும், சுற்றுலா ரீதியாகவும் இயக்கப்படுவதால், பொதுமக்கள், பெண்கள், பெரியவர்கள், வட நாட்டுக்கும், மயிலாடுதுறையை சுற்றி பல்வேறு நவகிரக ஸ்தலங்கள், புண்ணிய கோவில்கள்,தீர்த்தங்கள் இருப்பதனால் வட இந்திய மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் மயிலாடுதுறை ரயில்வே நிலையத்திற்கும் தினமும் வந்து செல்கின்றனர்.
தென்னக ரயில்வே சார்பில் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்ற போதிலும், டிக்கெட் கவுண்டர்கள் போதுமான அளவில் இல்லை என்னும் நிலையே தற்போது உள்ளது.அதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றார்கள். ஏற்கனவே இரண்டு முன் பதிவில்லா டிக்கெட் கவுண்டர்கள், மற்றும் முன்பதிவு செய்வதற்கு என்று இரண்டு டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் தற்போது தலா ஒன்று மட்டுமே இயங்குவது அவசரமாக ரயில் நிலையத்திற்கு வருகின்ற பயணிகளுக்கும், கூட்டம் அதிகமாக இருப்பதனால் டிக்கெட் எடுக்க இயலாமல் உரிய நேரத்தில் ரயில்களை பிடிக்க முடியாமல் தவறவிட்டு பயணங்கள் ரத்தாகிவிடும் அவல நிலை ஏற்படுகிறது.
டிக்கெட் புக்கிங் கவுண்டர்களில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக திறக்க ப்படவில்லை என்ற ரயில்வே நிர்வாகத்தின் பதில் ஏற்புடையதல்ல. ஆகவே கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையையும் உணர்ந்து உடனடியாக மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் குறைந்தது முன்பதிவில்லா டிக்கெட் விற்பனைக்காவது இரண்டு டிக்கெட் கவுண்டர்களை திறக்க வேண்டும் என்று ரயில் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் சார்பில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.