0 0
Read Time:6 Minute, 57 Second

கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என தமிழக காவல்துறை எச்சரிக்கை

கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இது போன்ற உண்மையில்லாத மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும் வதந்திகளையும் பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்றும் அண்ணாமலைக்கு தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

பி.ஜே.பி மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். புலன் விசாரணை நடந்த கொண்டிருக்கும்போதே, அதுவும் வெடித்து சிதறிய சிலிண்டர், மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்ன என்று பல கருத்துக்களைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார் . இந்த வழக்கை தாமதமாக NIAவிற்கு அனுப்பியதாக கூறுகிறார் .

இது போன்ற நிகழ்வுகள் நடந்த உடன் வழக்கு பதிவு செய்வதும் விசாரணை நடத்துவதும் உள்ளூர் காவல் துறைதான். எல்லா மாநிலத்திலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. இதுதான் சட்டம். விசாரணையில் பயங்கரவாத தடுப்பு சட்டப்பிரிவு (UAPA) சேர்க்கப்பட்டலோ அல்லது தேசிய புலனாய்வு முகமை சட்டம், 2008ல் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலோ, தேசிய புலனாய்வு முகமை சட்டப் பிரிவு 6-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய அதிகாரி, மாநில அரசாங்கத்திற்கு உடனடியாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையைப் பெற்றவுடன், மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு விரைவில் தெரியப்படுத்த வேண்டும்.

அந்த அறிக்கையைப் பெற்றவுடன், ஒன்றிய அரசு, 15 தினங்களுக்குள், வழக்கின் தன்மைக்கு ஏற்ப, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கும். இதுதான் சட்டம். ஆனால், நடைமுறையில் , ஒன்றிய அரசு , தேசிய புலனாய்வு முகமையிடம் கருத்துரு பெற்று, விசாரணைக்கு ஆணை பிறப்பிக்க சில மாதங்கள் கூட ஆவதுண்டு. அதுவரை அந்த வழக்கின் புலன் விசாரணையை, வழக்கு பதிவு செய்த, காவல் நிலைய, புலனாய்வு அதிகாரியே மேற்கொள்வார்.

கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடித்த வழக்கில், இந்த சட்ட நடைமுறை, எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு, மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு முறையாக அறிக்கையை அனுப்பி, அதன்பிறகு, வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது.

மேலும் , சில முக்கியத்துவம் மிக்க வழக்குகளில், ஒன்றிய உள்துறை தாமாகவே முன் வந்து NIA விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கலாம். ஆனால் இந்த வழக்கில், ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கோவை கார் வெடிப்பு நிகழ்வை NIA விசாரிக்க பரிந்துரை செய்தார்.

இதில் எங்கே தாமதம் வந்தது? இதற்கு முன்னால் நிகழ்ந்த இது போன்ற நிகழ்வுகளில் சில மாதங்கள் கழித்துத்துக்கூட வழக்குகள் NIA இடம் ஒப்படைக்கப்பட்டன, அதுவும் சில வழக்குகளில், சில மாநிலங்களில் ஆவணங்கள் பல மாதங்களுக்குப் பின்னரே NIA விடம் ஒப்படைக்கப்பட்டன.

ஏனென்றால், அவர் குறிப்பிடுவது, புது டில்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கை ஆகும். இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை.

அவர் குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை மாநகரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. 18.10.2022 தேதியிட்ட வழக்கமான சுற்றறிக்கை 21 ஆம் தேதி பெறப்பட்டு உடனே அனைத்து நகரங்களுக்கும், மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இவர் சொல்வது போல் கோவையில் இந்த சம்பவம் சில குறிப்பிட்ட நபர்கள் நடத்தப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்திருத்தால் தமிழ்நாடு காவல்துறை அந்த நிமிடமே அந்த நபர்களைக் கைது செய்து , வீடுகளை சோதனையிட்டு , வெடி பொருட்களை கைப்பற்றி இருக்கும். எனவே இது போன்ற உண்மையில்லாத மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும் வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %