சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர் உள்ளிட்டோர் மலர்துவி மரியாதை செலுத்தினர்.
ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் பல்வேறு பகுதிகள் குறுநில மன்னர்களின் கீழ் இருந்தது. அவ்வாறு இருந்த 550க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை ஒருங்கிணைந்த பகுதியாக இணைத்த பெருமை சர்தார் வல்லபாய் படேலை சேரும்.
இந்தியாவுடன் கடைசிவரை இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம், ஜூனாகத்(குஜராத்) நவாப் ஆகியோரை தனது வல்லமையால் இணைய வைத்தவர். எனவே இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான படேல், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.
இவரது சிறப்பை பறைசாற்றும் வகையில் பிரதமர் மோடி குஜராத்தில் ஒற்றுமை சிலை ஒன்றை நிறுவினார். இதன் உயரம் 182 மீட்டர் ஆகும். மேலும் சர்தார் வல்லபாய் பிறந்த தினத்தை தேசிய ஒற்றுமை தினமாக அறிவித்து, ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சர்தார் வல்லபாய் படேலின் 147-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா மற்றும் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.