0 0
Read Time:5 Minute, 10 Second

கனமழையால் பயிர்கள் சேதமடைந்து, பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக எதிக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் கடந்த ஆண்டு பெய்த மழையினால் நெற்பயிர்கள் பெருமளவு பாதிப்படைந்தன. இது குறித்து, வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை நேரடியால பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என ஆளும் திமுக அரசை வலியுறுத்தினேன்.

சில நாட்களுக்கு முன்பு, இந்த அரசு 2021-2022ஆம் ஆண்டுக்கு, பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு ரூ.480 கோடியை பெற்றுத் தந்ததாக விளம்பரப்படுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை துவக்கியது. அதன்படி, பாதிக்கப்பட்ட பெரும்பாலான விவசாயிகளுக்கு வெறும் ரூ.250 மட்டுமே வழங்கப்பட்டதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். மேலும் பல கிராமங்களுக்கு காப்பீட்டு நிவாரணம் பெற்றுத்தரப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

2021ஆம் ஆண்டு புயல் மற்றும் பருவ மழையின் போது, எதிர்க்கட்சி தலைவராக, நான் நேரடி கள ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசும்போதும், அறிக்கைகளின் வாயிலாகவும், உடனடியாக வேளாண் மற்று, வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினை அனுப்பி, பாதிப்பிற்கு ஏற்ப பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தகுந்த இழப்பீடு பெற்றுத்தர முதலமைச்சரை வற்புறுத்தினேன்.

ஆனால், அப்போது பதிலளித்த வேளாண்துறை அமைச்சர், எனது அறிக்கையில் உள்ள உண்மைகளை புரிந்து கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக பதிலளித்தார். எனினும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக முதலமைச்சர், மாவட்ட அமைச்சர்கள் மற்றும் துறை அமைச்சர்கள் நேரில் சென்று, துறை அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி கள ஆய்வு செய்து உண்மையான சேத விவரங்களை அரசுக்கு அனுப்புமாறு மீண்டும் வலியுறுத்தினேன்.

ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், இன்று விவசாயிகள் நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் செலுத்திய பயிர் காப்பீட்டு பிரீமியம் தொகையைக் கூட பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த அரசு பெற்றுத்தரவில்லை என்பது வேதனைக்குரியது. இந்த அரசின் நிர்வாக குளறுபடிகள் காரணமாக தமிழக விவசாயிகள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதற்கு இந்த ஒரு நிகழ்வே எடுத்துக்காட்டாகும்.

இந்த அரசு விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிவாரணம் பெற்றுத் தருவதில் தங்களுக்கு எந்தவிதமான கமிஷனும் கிடைக்காது என்பதால், விவசாயப் பெருமக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தரும் உயரிய நோக்கில் மெத்தனமாக பணியாற்றுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளை நீக்கி பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருவர்கூட விடுபடாமல், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை காப்பீட்டுத் திட்டம் மூலம் பெற்றுத்தர வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %