குஜராத்தில் விபத்துக்குள்ளான தொங்கு பாலத்தின் கேபிள்களை மாற்றாமல் பெயிண்ட் அடித்து, ஒப்பந்த நிறுவனம் ஏமாற்றியுள்ளதாக விசாரணை குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொங்கு பாலம் அமைந்துள்ளது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் சமீபத்தில் நடைபெற்றன. கடந்த அக்டோபர் 26ம் தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டு பொது பயன்பாட்டுக்கு வந்தது.
குஜராத் மக்களுக்கான புது வருட தொடக்கத்துடன் இணைந்து பாலம் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிலையில், இந்த பாலத்தில் சில தினங்களுக்கு முன்பு 500க்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தபோது, திடீரென பாலம் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள காவல்துறை உயர் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து குஜராத் அரசு உத்தரவிட்டது. அந்த விசாரணை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”143 ஆண்டுகள் பழமையான பாலத்தை புனரமைப்பதற்கு முன்னும், பின்னும் கட்டமைப்பு குறித்த தணிக்கையை அரசு அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. பாலம் பழுதுபார்க்கும் ஒப்பந்தம் முறையாக ஏலம் விடப்படவில்லை. பாலத்தை புதுப்பித்த குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு, டெண்டர் இல்லாமல் மோர்பி நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
பாலத்தில் இருந்த பழைய கம்பிகளை மாற்றாமல் பெயிண்ட் மட்டும் அடித்து ஒப்பந்த நிறுவனம் ஏமாற்றியுள்ளது. பாலத்தை புனரமைக்க ஒப்பந்ததாரருக்கு டிசம்பர் வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தீபாவளி மற்றும் குஜராத்தி புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அவசரமாக திறக்கப்பட்டுள்ளது. மேலும், தொங்கு பாலத்தில் செல்லும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான எந்த அவசரகால திட்டமும் கடைபிடிக்கவில்லை” எனவும் கூறப்பட்டுள்ளது.