செம்பனார்கோயில், நவ-01;
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் முதியோர் தொகை வழங்க வேண்டியும், தார்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், காளகஸ்தினாதபுரம் பஸ் நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பேசினர்.
இதுதொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில், செம்பனார்கோயில் ஒன்றியத்தில் உள்ள சேதமடைந்த சாலைகள் அனைத்தும் விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் உதவி தொகை விடுபட்டவர்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மழைக்காலமாக இருப்பதால் பொதுமக்களுக்கு மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று பேசினார்.
முன்னதாக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகனிடம், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கொடுத்தனர். இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் பி.எம்அன்பழகன், எம்.அப்துல் மாலிக், தகவல் தொழில்நுட்ப அணி தஞ்சை மண்டல பொறுப்பாளர் பிஎம்.ஸ்ரீதர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக் மற்றும் வேளாண்மை அதிகாரிகள், சுகாதாரத் துறை மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனகர் நன்றி கூறினார்.
அதேபோன்று எடுத்துக்கட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பைலட் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. கிராம சபா கூட்டங்களில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல், பொது இடங்களில் குப்பைகளை கொட்டும் நபர்களுக்கு அபராதம், மேலும் உள்ளாட்சி தினமாக நவம்பர் 1 அறிவித்து கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்