மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சங்கங்களின் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் நாகராஜன், ராமபத்திரன், கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பிரேம் சந்திரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பழனிவேலு தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மாநில அமைப்பு செயலாளர் ஜெயக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாநில துணைத்தலைவர் குப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 20 சதவீதம் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 65 வயது முதல் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் 12 ஆயிரமாகவும், கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதிகமாகவும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.