சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 3 நாட்களில், வடமேற்கு திசையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.