டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் நிலை-2, நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்பட குரூப்-2, 2ஏ பிரிவுகளின்கீழ் வரும் 5,208 இடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது.
இந்த குரூப் 2, 2ஏ தேர்வை எழுத 11,78,175 பேர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், 9,94,890 பேர் தேர்வை எழுதினர். இத்தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என ஜூன் மாதம் முதலே தேர்வர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் இதற்கான முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் தெரிவு முறை நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் குரூப் 2 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.