வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன், “தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய வங்கக்கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, வரும் நவம்பர் 12ம் தேதி வரை, வடமேற்கு திசையில், தமிழகம், புதுவை கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆகிய தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்காலில் ஆறு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நவம்பர் 12ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்காள பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். எனவே மீனவர்கள் 12ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையைப் பொறுத்த வரையில் நவம்பர் 10ஆம் தேதி நகரின் ஒரு சில பகுதியில் கனமழையும், 11, 12 தேதிகளில் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், 13ஆம் தேதி ஒரு சில பகுதியில் கனமழையும் பெய்யக்கூடும். இது புயலாக வலுப்பெற
வாய்ப்பு இல்லை. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் 01 ஆம் தேதி முதல் இன்று வரை(09/11/2022) தமிழ்நாட்டில் 23.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பான அளவு 24.3 செ.மீ விட இரண்டு சதவிகிதம் குறைவு. சென்னையில் 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 13 சதவீதம் கூடுதலாகும்” என தெரிவித்துள்ளார்.