பேரறிவாளனை தொடர்ந்து சிறையில் இருந்த 6 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரை இன்று விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 6 தமிழர்களின் நன்நடத்தை, கல்வித் தகுதி மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநரும், ஒன்றிய அரசும் உள்நோக்கத்துடன் முடிவெடுக்காமல் இந்த வழக்கை கிடப்பில் போட்டு வந்தனர். ஆனால், உச்சநீதிமன்றம் இவர்களை தற்போது விடுதலை செய்துள்ளது. இந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில், ராஜீவ் காந்தியும் அவரோடு சேர்ந்து சிலரும் படுகொலை செய்யப்பட்டது மிகுந்த வேதனைக்குரிய நிகழ்வாகும் என குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு மூலம் உச்சநீதிமன்றம் மாநில அரசின் உரிமைகளை உறுதிபடுத்தியதுடன், ஆளுநரின் செயல்பாட்டிற்கும், ஒன்றிய அரசுக்கும் சரியான பாடம் புகட்டியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வழக்கில் 7 தமிழர்களின் விடுதலைக்காக துவண்டுவிடாமல் கடைசிவரை போராடியவர்களும், சிறப்பாக சட்டப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களும், இந்த சட்டப் போராட்டத்தில் பேருதவியாக அமைந்த தமிழக அரசின் வழக்கறிஞர்களும், நடுநிலையுடன் சட்டத்தின் பிரகாரம் மாநில அரசின் உரிமையை காக்கும் வகையில் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளும் பாராட்டுக்குரியவர்கள் ஆவர் என தெரிவித்துள்ளார்.
இதேபோல், தமிழ்நாடு அரசு, தமிழக சிறைகளில் நீண்ட நாள் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய ஆயுள் சிறைக் கைதிகளை, அவர்களின் வயதுமுதிர்வு, உடல்நலன், குடும்பச் சூழல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, கருணை அடிப்படையில் விடுதலை செய்ய அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.