தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி தொடங்கியது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த நான்கு நாட்கள் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்று வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக – கேரள பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளில் செல்லக்கூடும்.
இதன் காரணமாக, நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 14 முதல் 16 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
நவம்பர் 12 முதல் 16 ஆம் தேதி வரை, வட தமிழக கடலோரப் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்றானது வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்த கூடுதல் தகவல்கள் பெற mausam.imd.gov.in/chennai என்ற இணையதள முகவரியை பயன்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.