சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் அதிகபட்சமாக 43 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து பெய்த கனமழையால் டேனிஷ் கோட்டையை மழைநீர் சூழ்ந்தது. இதுவரை இப்படியொரு மழையை பார்த்ததில்லை என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த மழையால், அப்பகுதியில் பயிடப்பட்டு இருந்த பல ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சீர்காழியில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழையால் சீர்காழி வட்டாரத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சீர்காழி அடுத்த வேட்டங்குடி, இருவக்கொல்லை, வேம்படி, வாடி, கேவரோடை, உள்ளிட்ட கிராமங்களில் காட்டுவாய்க்கால் தூர்வாராதால் வடிகால் வசதியின்றி சுமார் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து வெள்ள காடாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேலும், மேகவெடிப்பு காரணமாக இது ஏற்படவில்லை என்றும், ஏற்கெனவே அதிகபட்ச மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.