மத்திய அரசின் திட்டங்களை பெறுவதற்கான தகுதி இருந்தும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நலம் காப்பதற்காக மத்திய அரசு கொண்டுவரும் நல்ல பல திட்டங்கள், நம் மாநிலத்தில் சரிவர கிடைக்கவில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன் அடிப்படையில் கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணி, பிரிவு, தலைவர்கள் ஆகியோர் நேற்று முதல், தமிழகம் முழுவதிலும் உள்ள பட்டியல் இன சகோதரர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று, சந்தித்து பேசினர் எனக்கூறினர்.
அப்போது, அவர்களின், குறைகளைக் கேட்டறிந்து, அந்த ஊரில் அமைந்துள்ள பொதுவெளியில், சமுதாய கூடத்தில் அல்லது கோயில் மண்டபம் போன்ற இடங்களில் அனைத்து மக்களையும் சந்தித்து, கலந்து பேசி அவர்களின் குறைகளை கேட்டுத்தெரிந்து கொண்டனர். குறிப்பாக, பட்டியலினச் சகோதர சகோதரிகள் தங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று தெரிவித்ததால், கடந்த நவம்பர் 9ஆம் தேதி தான், மதுரை மாவட்டத்தில், வாடிப்பட்டி தாலுகா, சாணாம்பட்டியில், உற்சாகமான கிராம மக்களிடம், உரையாடினேன்.
பாசம் காட்டிய பட்டியல் இனச் சகோதரரின் இல்லத்தில் மதிய உணவு அருந்தி, ஆலய மண்டபத்தில் அமர்ந்து, அன்பார்ந்த கிராம மக்கள் மத்தியிலே அளவளாவியது ஆனந்தமான நிகழ்வு. மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் நேற்று வடபழனியில் வசிக்கும் பழக்கடை மணிகண்டனின் இல்லத்திற்கு சென்று உணவருந்தி உரையாடினார். இதுபோல அனைத்து நிர்வாகிகளும் அந்தந்த பகுதியில் பங்கு பெற்ற நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இப்படி நம் சகோதரர்கள் வீட்டிற்கு செல்லும் பாஜக நிர்வாகிகள் முதலில் அனைவரையும் ஒன்று திரட்டி அவர்களுக்கு உள்ள குறைகளை கேட்டறிந்தனர். பிறகு அவர்களுக்கு மத்திய அரசு நலத்திட்டங்கள் முறையாக கிடைக்கிறதா என்று கேட்டறிந்தனர். செல்லும் இடங்களில் எல்லாம் பலருக்கும் மத்திய அரசின் திட்டங்களை பெறுவதற்கான தகுதி இருந்தும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லை என்ற கசப்பான உண்மை நமக்கு புரிந்தது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களுக்கு மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, நன்மைகளை, மத்திய அரசுத் திட்டங்களை மக்களின் உரிமையை அவர்களுக்கு வழங்கும் அதே வேளையில், விழிப்புணர்வூட்டும் நிகழ்வாக வரும் நவம்பர் மாதம் 25-ஆம் தேதி சிதம்பரத்தில் இந்திய அரசியல் அமைப்பு தினம் பாஜக சார்பில் கொண்டாடப்படுகிறது என அண்ணாமலை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.