அவர் வைத்த வேண்டுகோளின்,
“தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளை நம்பியே ஏழை எளிய மக்கள் தங்கள் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்து கொண்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 70 சதவீத மக்களின் மருத்துவ உதவி செய்யும் மையங்களாக திகழ்கின்ற அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்களின் பணிகளை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். தினமும் சிறந்த சேவையாற்றி வருகின்ற நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் செவிலியர்களிடையே, ஒரு சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த மருத்துவத்துறையை களங்கம் ஏற்படுத்துவது மிகவும் வேதனை அளிக்கின்றது.
குறிப்பாக வெண்மை நிற வேஷ்டியில் ஒரு கருப்பு புள்ளி இருந்தால் அதுதான் கண்ணுக்கு முந்தித்தெரியும் என்பார்கள். அதனைப் போல ஒரு மருத்துவர் தவறு செய்தாலும் ஒட்டுமொத்த மருத்துவத்துறையே தவறிழைத்தது போல சித்தரிக்கப்படுவது ஏற்புடையதல்ல. சென்னை கால்பந்து வீராங்கனை பிரியா, இரண்டு மருத்துவர்களின் அலட்சியமான செயல்பாட்டால் மரணமற்றது ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்தப் பிரச்சினையில் தவறு செய்தது இரண்டு மருத்துவர்கள் என்றாலும் அதன் பிறகு அந்த மருத்துவமனை மட்டுமல்லாமல், மிகவும் கஷ்டப்பட்டு மக்களிடம் செல்வாக்கை பெற்று தேர்தலில் நின்று வெற்றி பெற்ற அரசின் மீதும் குற்றச்சாட்டு எழுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆகவே அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் உச்சபட்ச கவனம் செலுத்தி ஒவ்வொரு நோயாளிக்கும் மருத்துவம் செய்திட முன்வர வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வு எப்போதும் உங்களுடனே இருக்கவேண்டும் . சிறிது அலட்சியம் காட்டினாலும் நோயாளியின் உயிர் பறிபோவது வீராங்கனை பிரியாவின் மரணத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது. கவனக்குறைவு என்பதோ அலட்சியம் என்பது இருக்கவே கூடாத ஒரு துறை என்றால் அது மருத்துவத்துறையே என்பது அவசியமான உண்மை. மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் கூட பல்வேறு நெருக்கடிகள், அதிக நேர உழைப்பு, ஓய்வின்மை, நோயாளிகளின் ஒத்துழையாமை, புற அழுத்தம் போன்றவற்றால் சோர்வும் அலட்சியமும் ஏற்படுவது தவிர்க்க இயலாது என்றாலும் கூட வாகன ஓட்டிகள் ஒரு நிமிடம் கண்ணை மூடினால் சாலை விபத்து ஏற்படுவது போல மருத்துவர்களும் அலட்சியம் காட்டினால் விபத்து உறுதி.
ஆகவே பணிச்சுமையோ மன அழுத்தங்களோ ஏற்படுகின்ற பொழுது மாற்று ஏற்பாடுகளை செய்து விட்டு ஓய்வெடுக்க செல்வது தவறல்ல. மேலும் அரசு மருத்துவமனைகளை பொறுத்த வரை ஒரு நோயாளிக்கு, ஷிப்ட் முறையில் மாற்றி மாற்றி பல்வேறு மருத்துவர்கள் சேவையாற்றுவதால் அதன் தொடர்ச்சி மிக முக்கியமானது என்பது மிகவும் கவனிக்க வேண்டியதாகும். இத்தகைய நடைமுறைகளை பின்பற்றினால் எதிர்காலத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் மரணம் என்னும் செய்தியே வராது என்பதும் உறுதி. ஆகவே அரசு மருத்துவர்களே, செவிலியர்களே மருத்துவ சேவையில் அலட்சியம் காட்டாதீர்”
என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.