0 0
Read Time:9 Minute, 35 Second

தமிழை புறக்கணித்தால் நாட்டுக்கு பெரும் கேடு விளைவித்தவர்கள் ஆவோம் என பிரதமர் மோடி காசி தமிழ் சங்கமத்தில் பேசினார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ என்னும் ஒரு மாத கால நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் மிகப் பழமையான, கல்வி முக்கியத்துவம் வாய்ந்த தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்காலத் தொடர்பைக் கொண்டாடுவதும், அந்தப் பெருமையை மீட்டெடுத்து உறுதிப்படுத்துவதும், இந்த திட்டத்தின் நோக்கமாகும். தமிழகத்தில் இருந்து 2500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் காசிக்கு வருகை தரவுள்ளனர். இந்த தொடக்க நிகழ்ச்சியின் போது, 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ‘திருக்குறள்’ புத்தகத்தையும் பிரதமர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், உலகின் மிகப் பழமையான உயிர்ப்புடன் உள்ள நகரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நதிகள், சித்தாந்தம், அறிவியல் அல்லது அறிவின் சங்கமம் என எதுவாக இருந்தாலும், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் ஒவ்வொரு சங்கமமும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு போற்றப்படுகிறது. உண்மையில், காசி-தமிழ் சங்கமம் இந்தியாவின் வலிமை மற்றும் குணாதிசயங்களின் கொண்டாட்டமாகும். இதனால் இது தனித்துவம் பெறுகிறது.

ஒருபுறம் காசி இந்தியாவின் கலாச்சார தலைநகரம். அதேசமயம் தமிழ்நாடு மற்றும் தமிழ் கலாச்சாரம் இந்தியாவின் தொன்மை மற்றும் பெருமையின் மையமாக விளங்குகிறது. காசியும், தமிழகமும் காலத்தால் அழியாத நமது கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மையங்கள். சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் மிகவும் பழமையான, இன்றும் உயிர்ப்புடன் திகழும் மொழிகளாகும். காசியில் பாபா விஸ்வநாதர் இருக்கிறார், தமிழகத்தில் ராமேஸ்வரத்தின் அருள் உள்ளது. காசி, தமிழகம் இரண்டுமே சிவனின் அருளைப் பெற்றுள்ளன. இசையோ, இலக்கியமோ, கலையோ எதுவாக இருந்தாலும், காசியும், தமிழகமும் எப்போதும் அவற்றின் ஆதாரமாக விளங்குகிறது.

இந்த இரண்டு இடங்களும் இந்தியாவின் தலைசிறந்த ஆச்சார்யர்களின் பிறப்பிடமாகவும் பணிபுரியும் இடமாகவும் திகழ்ந்துள்ளன. காசியிலும் தமிழகத்திலும் ஒரே மாதிரி சக்தியை அனுபவிக்க முடியும். இன்றும் தமிழர்களின் பாரம்பரிய திருமண ஊர்வலத்தின் போது காசி யாத்திரை இடம் பெறுகிறது. தமிழ்நாட்டின் காசி மீதான தீராத காதல், நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையான ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்னும் உணர்வைக் குறிக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்தாலும் காசியில் வாழ்ந்த வேத பண்டிதர் ராஜேஷ்வர் சாஸ்திரியையும், காசியில் உள்ள அனுமான் படித்துறையில் வாழ்ந்த பட்டாபிராம சாஸ்திரிகளும் முக்கியமானவர்கள்.

அரிச்சந்திரா படித்துறை கரையில் உள்ள தமிழர் கோவிலான காசி காமகோடீஸ்வரர் திருக்கோயில் மற்றும் கேதார் படித்துறை கரையில் உள்ள குமாரசாமி மடம் மற்றும் மார்கண்டேய ஆசிரமம் ஆகியவை இருநூறு ஆண்டுகள் பழமையானவை. கேதார் படித்துறை மற்றும் அனுமான் படித்துறை கரையோரங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் வசித்து வருவதாகவும், பல தலைமுறைகளாக காசிக்கு மகத்தான பங்களிப்பைச் செய்து வருகின்றர். மாபெரும் கவிஞரும் புரட்சியாளருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்பிரமணிய பாரதியும் பல ஆண்டுகளாக காசியில் வாழ்ந்தார். சுப்ரமணிய பாரதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இருக்கையை நிறுவி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் பெருமை சேர்த்துள்ளதன.

பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையான கலாச்சாரம் மற்றும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நாடு இந்தியா. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் இந்த பாரம்பரியத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் இல்லாதது குறித்து பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார். காசி தமிழ் சங்கமம் இன்று இந்தத் தீர்மானத்திற்கான களமாக மாறும் அதே வேளையில் நமது கடமைகளை நாம் உணர்ந்து கொள்ளவும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் ஆற்றலாகவும் திகழும்.

சுவாமி குமரகுருபரர், மொழி மற்றும் அறிவு தடையை உடைத்து, காசியைத் தம் கர்ம பூமியாக ஆக்கிக் கொண்டதுடன், காசியில் கேதாரேஷ்வர் கோயிலைக் கட்டினார். பின்னர், அவரது சீடர்கள் தஞ்சாவூரில் காவேரி நதிக்கரையில் காசி விஸ்வநாதர் கோயிலைக் கட்டினார்கள். காசிக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் இடையிலான தொடர்பைச் சுட்டிக்காட்டிய பிரதமர், தமிழ் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் போன்றவர்களுக்கு காசியுடன் உள்ள தொடர்பை குறிப்பிட்டார்.

வடக்கையும் தெற்கையும் இணைப்பதில் ராஜாஜி எழுதிய ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் பங்கு அளப்பரியது. “தென்னிந்தியாவில் இருந்து ராமானுஜ ஆச்சாரியார், சங்கராச்சாரியார், ராஜாஜி முதல் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வரையிலான அறிஞர்களைப் புரிந்து கொள்ளாமல், இந்தியத் தத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பது எனது அனுபவம்” என்று பிரதமர் கூறினார்.

‘ஐந்து உறுதிப்பாடுகள்’ பற்றி குறிப்பிட்ட பிரதமர், செழுமையான பாரம்பரியம் கொண்ட நாடு அதன் மரபு குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும். உலகில் இப்போதும் வாழும் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாக, தமிழ் இருந்த போதிலும், அதை முழுமையாகக் கௌரவிப்பதில் நாம் தவறி விட்டோம்.

“தமிழின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வளப்படுத்துவது 130 கோடி இந்தியர்களின் பொறுப்பு. நாம் தமிழை புறக்கணித்தால் நாட்டுக்கு பெரும் கேடு விளைவித்தவர்கள் ஆவோம். தமிழைக் கட்டுப்பாடுகளுக்குள் அடைத்து வைப்பது, அதற்குப் பெரும் தீமை விளைவிப்பதாகும். மொழி வேறுபாடுகளை நீக்கி, உணர்வுபூர்வமான ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்”.

சங்கமம் என்பது வெறும் வார்த்தை அல்ல, அது ஒரு அனுபவம். காசி மக்கள் மறக்க முடியாத விருந்தோம்பலை வழங்குவதில் எந்தக் குறையும் வைக்காது. தமிழகம் மற்றும் பிற தென்மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து இளைஞர்கள் வருகை தந்து அங்குள்ள கலாச்சாரத்தை உள்வாங்க வேண்டும். இந்த சங்கமத்தின் பயன்களை ஆராய்ச்சி மூலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும், இந்த விதை ஒரு மாபெரும் மரமாக மாற வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %