மங்களூரு குக்கர் வெடிகுண்டு சம்பவத்துடன் தொடர்பான விசாரணையில் ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கர்நாடக ஏடிஜிபி அலோக் குமார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19 ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த நிலையில், ஓட்டுநர் மற்றும் பயணி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த விசாரணையில், பயங்கரவாத சதி திட்டம் என்பது தெரியவந்த நிலையில், ஆட்டோ பயணி முகமது ஷாரிக்கிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதன் அடிப்படையில் கோவையிலிருந்து முகமது ஷாரிக்கிற்கு சிம் கார்டு வாங்கி தந்த உதகையைச் சேர்ந்த சுரேந்திரனிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். மேலும், முகமது ஷாரிக்கின் செல்போனில் இருந்து நாகர்கோவிலில் உணவகத்தில் பணியாற்றிய அசாம் மாநில இளைஞருக்கு அழைப்பு சென்றிருந்த நிலையில், அவரிடமும் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.
மங்களூரு தந்தை முல்லர் மருத்துவமனையில் முகமது ஷாரிக் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை குடும்பத்தினர் சந்தித்துப் பேசினர். முகமது ஷாரிக்கை சேர்ந்த குடும்பத்தினர் 3 பெண்கள் உள்பட 4 பேரை விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே முகமது ஷாரிக் வீட்டிலிருந்து பறிமுதல் செய்த பொருட்களை ஆய்வு செய்தபின் கர்நாடக சட்ட ஒழுங்கு ஏடிஜிபி அலோக் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, முகமது ஷாரிக்கின் மீது மங்களூருவில் 2 வழக்குகளும் சிவமோகாவில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளதாக அவர் தெரிவித்தார். உபா சட்டத்தின் கீழ் 2 வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ஒரு வழக்கில் முகமது ஷாரிக் தேடப்பட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
5 தனிப்படைகள் அமைத்து முகமது ஷாரிக்கிற்கு தொடர்புடைய 7 இடங்களில் சோதனையிட்ட போது, ஏராளமான வெடிபொருட்கள், வெடிபொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அலோக் குமார் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் அமேசானில் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் முகமது ஷாரிக் வாங்கியது, விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் குழு உருவாக்கி கிரிப்டோ கரன்சி மூலம் பணம் வசூலில் ஈடுபட்டதும், நண்பர்களுடன் ஆற்றங்கரையோரம் கூட்டாளிகளுடன் வெடிகுண்டை வெடிக்க செய்து பயிற்சி எடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 2 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அராபத் அலி, முசாவிர் ஹுசைன் ஆகியோருடன் ஷாரிக் தொடர்பிலிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஷாரிக்கிற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததும் தெரியவந்துள்ளதால், வழக்கை என்ஐஏ விசாரணைக்கு ஒப்படைக்க உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.