பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் ஆறு மாத காலத்திற்கு கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் பாஜக நிர்வாகிகள் சூர்யா சிவா மற்றும் டெய்சி சரண் ஆகியோர் பேசும் காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால், அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். ஆகவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்” என்று அறிவித்துள்ளார்.
இதுபோலவே அண்ணாமலை வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், “பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் அவர்களும் ஓபிசி அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா இருவரும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்திற்கு வந்தது. இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த ஏழு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கை சமர்ப்பிக்கும் வரை ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.