திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படாததால் தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த 10 பக்க மனுவில் இடம்பெற்ற விவரங்களைப் பார்ப்போம்.. கடந்த 18 மாத கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படாததால் தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும், கோவையில் நடைபெற்ற சிலிண்டர் குண்டுவெடிப்பு உளவுத் துறையின் தோல்வி மட்டுமின்றி காவல்துறையின் அலட்சியத்தையும் காட்டுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும், போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதில் அரசு படுதோல்வியடைந்திருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு முதலமைச்சர் இதுவரை கண்டனம் தெரிவிக்காததும் கவலை கொள்ளாததும் ஆச்சரியமான ஒன்றாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை இறுதி செய்யாததால் தமிழகத்தில் மருந்துப் பற்றாக்குறை உள்ளது என்றும், அரசு மருத்துவமனைகளிலும், சந்தையிலும் காலாவதியான மற்றும் போலி மருந்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் திட்டங்களை விவரிக்கும் ஃப்ளெக்ஸ் போர்டுகளை அமைப்பதில் பெரிய அளவில் ஊழல்கள் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.டாஸ்மாக் கடைகளை ஒட்டி சட்ட விரோத பார்கள் நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன என்றும், இந்த சட்டவிரோத பார்கள் அனைத்தும் ஆட்சியாளர்களாலும் ஆளுங்கட்சியினராலும் நடத்தப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
மழைநீர் வடிவால் பணி என்ற பெயரில் திமுக அரசு கஜானாவை மொட்டை அடித்து வருகிறது என்றும், இத்திட்டத்தில் பெரும் மோசடி நடந்திருப்பதாகத் தெரிகிறது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் தகவல் மற்றும் பொழுபோக்குக்காக செயல்பட்டு வரும் அரசு கேபிள் டிவிக்கு மூடு விழா நடத்த திமுக அரசு முயன்று வருவதாகவும் ஆளுநரிடம் இபிஎஸ் அளித்த அனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.