தமிழக பாஜக ஓபிசி பிரிவு பொதுச் செயலாளர் சூர்யா சிவா அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக பெண் நிர்வாகி ஒருவருடன் தொலைபேசியில் உரையாடியபோது அவரை சூர்யா சிவா அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. அவர்கள் இருவரும் பேசியதாக கூறப்பட்ட ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது தொடர்பாக திருப்பூரில் விசாரணை நடத்திய தமிழ்நாடு பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு சூர்யா சிவாவும், அந்த பெண் நிர்வாகியும் ஆஜராகினர். நடந்தவற்றை மறுந்துவிட்டு சுமூகமாக தங்கள் கட்சி பணிகளை தொடர விரும்புவதாக இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பெண்களை தெய்வமாக போற்றும் கட்சி பாஜக என்றும், பெண்களை இழிவுபடுத்துவதை பாஜக ஒருபோதும் ஏற்காது என்றும் கூறியுள்ளார். சுமூகமாக செல்வதாக இருவரும் கூறினாலும், கட்சியின் மாநில தலைவராக அதனை ஏற்க தாம் தயாராக இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
எனவே கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதை சூர்யா சிவா ஒப்புக்கொண்டதையடுத்து அவரை 6 மாதத்திற்கு கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இடைநீக்கம் செய்வதாக அண்ணாமலை தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு சூர்யா சிவா பணியாற்றலாம் எனத் தெரிவித்துள்ள அண்ணாமலை, அவரது நடவடிக்கையில் மாற்றம் கண்டால், அவர் மீது தமக்கு நம்பிக்கை ஏற்பட்டால் பொறுப்பு சூர்யா சிவாவை தேடி வரும் என்றும் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.