கொரோனா தொற்று இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருவதால், சிதம்பரம் நகராட்சி நிா்வாகம் கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாவட்ட செய்தித் தொடா்பாளா் பெரு.திருவரசு சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலனை சந்தித்து அளித்த மனு: சிதம்பரம் கோயில் நகரமாகத் திகழ்கிறது. இங்கு, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. கொரோனா தொற்று பிரிவு படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக உள்ளதால், இங்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனா். மேலும், சிதம்பரம் நகரைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், சிதம்பரம் நகரிலும் கரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது.
எனவே, சிதம்பரம் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.