நடைபாதையை அடைத்து போடப்பட்ட வேலியை அகற்றக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை நடைபாதையை அடைத்து போடப்பட்ட வேலியை அகற்றக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த4 பேர் தீக்குளிக்க முயற்சி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூர் பழவேலங்குடி மேலத்தெருவை சேர்ந்த செல்வராஜ் மனைவி லதா. இவருடைய மகன் ரகுவரன் மற்றும் உறவினர்கள் 2 பேர் நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.பின்னர் அவர்கள் திடீரென தங்களது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். இதனைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:- நடைபாதையில் அமைக்கப்பட்ட வேலி எங்களது வீட்டுக்கு செல்லும் நடைபாதையை சிலர் தங்களது நிலம் எனக்கூறி வேலி வைத்து அடைத்து விட்டனர். இதையடுத்து அந்த தெருவில் வசித்து வந்த மற்ற 2 குடும்பத்தினர் வீட்டை காலி செய்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.தற்போது நாங்கள் மட்டுமே அங்கு வசித்து வருகிறோம். இதுகுறித்து கடந்த 3 மாதங்களாக தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து வருகிறோம்.
இதற்கிடையில் தரங்கம்பாடி தாசில்தார் விசாரணை நடத்தி பாதையில் அமைக்கப்பட்ட வேலியை அகற்ற வேண்டும் என கூறியபோது அவர்கள் மறுத்து விட்டனர். நேற்று முன்தினம் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பாதையில் அமைக்கப்பட்ட வேலியை அகற்றக்கோரி மனு கொடுத்தோம்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று முன்தினம் இரவு எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை அவர்கள் தாக்கினர். மேலும் வீட்டில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தையும் எடுத்து சென்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பரபரப்பு:
இதையடுத்து அவர்களிடம் உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலாஜி தெரிவித்தார். இதனால் அந்த குடும்பத்தினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.