ஜல்லிக்கட்டை காண நேரில் வர வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது, தமிழ்நாட்டில் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு வெறும் கேளிக்கை விளையாட்டு அல்ல என்று தெரிவித்த தமிழ்நாடு அரசு, அது தமிழர் பண்பாட்டோடும் கலாச்சாரத்தோடும் இணைந்த ஒன்று என கூறியது.
ஜல்லிக்கட்டு காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்றும் ஸ்பெயின் நாட்டில் இருப்பது போல் காளைகளை கொல்லும் வழக்கம் தமிழகத்தில் கிடையாது என்றும் அரசுத் தரப்பு தெரிவித்தது. காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் குடும்ப உறவு வைத்துள்ளனர் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு காளைகள் வருமானம் ஈட்டும் விலங்குகள் அல்ல என்று தெரிவித்த தமிழ்நாடு அரசு, அவை இனப்பெருக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன என்றும், அவை நாட்டு மாடுகளின் இனத்தை பாதுகாக்க பயன்படுத்தப்படுகின்றன எனவும் தெரிவித்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த பின்னர், அடுத்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வர வேண்டும் என்றும் நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்தது.