தமிழகத்தில் வரும் 8ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 6-ம் தேதி மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் 8-ம் தேதி காலை வடதமிழகம்-புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் வந்தடையக்கூடும்.
இதனால் இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதேபோல் டிசம்பர் 8ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், சென்னை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை முதல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் சூறாவளி புயல் காற்று வீசும் என்ப தால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கடலோர மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.