நாகையில் கடைசி நிமிடத்தில் போட்டி போட்டுக்கொண்டு டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி சென்ற மதுபிரியர்கள்.
தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளுடன் ஊரடங்கு உத்தரவை நேற்று முதல் அமுல்படுத்தியுள்ளது. இதன்படி காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று காலை திறக்கப்பட்டது. ஆனால் காலை முதல் மதுபிரியர்கள் மதுபானம் வாங்க வரவில்லை.இந்நிலையில் நேரம் ஆக ஆக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் வர தொடங்கியது. நாகை மாவட்டம் அருகில் உள்ள பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் வரும் 10ம் தேதி வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்தும் மதுபானம் வாங்க நாகையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபிரியர்கள் வந்தனர்.
கடைசி நேரத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை மூட ஷெட்டர்களை கீழே இறங்கி விட தொடங்கினர். இதனால் போட்டி போட்டுகொண்டு ஷெட்டர்களுக்குள் கை மற்றும் தலைகளை விட்டு மதுபானங்களை வாங்கி சென்றனர். காலம் கடந்து வந்த சில மதுப்பிரியர்கள் எவ்வளவே கெஞ்சி கேட்டும், போலீசாரின் கெடுபிடியால் மது கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.