குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலை ஒட்டிய பகுதிகளில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டுள்ளது. இது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அது தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு வங்காள விரிகுடாவில் 17 டிசம்பர் வரை அதன் தீவிரத்தை தக்க வைத்து கொள்ளும் என்றும், இதன் காரணமாக வரும் 19ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட மீன்வளம் (ம) மீனவர் நலத்துறை, “வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதன் காரணமாக தங்கு கடல் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடல் மற்றும் தங்கு கடல் படகுகள் அனைத்தும் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு உடனடியாக கரைத்தரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளது.