மயிலாடுதுறை:கொத்தங்குடி ஊராட்சியில் மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம்
தரங்கம்பாடி, டிசம்பர்- 17;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கொத்தங்குடி ஊராட்சி நீலவெளியில் ஓஎன்ஜிசி காவிரி அசட் காரைக்கால் சி.எஸ்.ஆர் நிதி உதவியுடன், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மதுரை – தஞ்சாவூர் மற்றும் முதியோர்களுக்கான முதியோர் அமைப்பு ஒருங்கிணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் ஓஎன்ஜிசி தலைமை குரூப் மேலாளர் மாறன் தலைமையில் நடைபெற்றது.
ஓஎன்ஜிசி பொது மேலாளர் சாபு, செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் மாலிக், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் முத்து-மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கி பேசினார். தொடர்ந்து முகாமில் மருந்து மாத்திரை வழங்கும் இடம் மருத்துவர்கள் பரிசோதனை செய்யும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு, பொதுமக்களுடன் அவரும் சேர்ந்து உடல் ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொண்டார்.
முகாமில் பொதுமக்களுக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவர் தனலட்சுமி, தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவர்கள் குருநாதன், ரஞ்சித்குமார் ஆகியோரின் தலைமையில் செவிலியர்கள், மருந்தாளுணர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் பொது மருத்துவம், இசிஜி, ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல், கண் பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளை சோதித்து மருந்து மாத்திரைகளை வழங்கினர்.
முகாமில் கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் தம்புமோகன், ஓஎன்ஜிசி மருத்துவ சேவை பொறுப்பாளர் கணேஷ்குமார், மனிதவள மேம்பாட்டு செயல் அலுவலர் சந்திரசேகர், கிளை மேலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்மு முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்