தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றுமுதல் வரும் டிசம்பர் 29-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் அடுத்த 48 மணிக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 30ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.