புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் அடிக்கடி உருமாறி வரும் நிலையில், பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடும் நிலையில், இந்தியாவிலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டெல்லியில், சப்தர்ஜங் மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கொரோனா ஒத்திகையை ஆய்வு செய்தார். மக்கள் சரியான சிகிக்சை பெறுவதை உறுதி செய்யவே அரசு மருத்துவமனைகளில் ஒத்திகை நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதேபோல், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றன. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் கொரோனா ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்போது எவ்வாறு தயாராக வேண்டும் என்பது பற்றி ஒத்திகை நடத்தப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர், காந்தி நகரில் உள்ள மருத்துவமனையில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள பல்ராம்பூர் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட கொரோனா ஒத்திகையை அம்மாநில துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் ஆய்வு செய்தார்.