பொங்கல் பண்டிகையையொட்டி 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து பொங்கல் பண்டிக்கைக்கு ஜனவரி 12 முதல் 3 நாட்களுக்கு 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 6 ஆயிரத்து 300 பேருந்துகளுடன், 4 ஆயிரத்து 449 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10 ஆயிரத்து 749 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பிற ஊர்களிலிருந்து 3 நாட்களுக்கும் 6 ஆயிரத்து 183 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சென்னையிலிருந்து கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி ஆகிய 6 இடங்களில் பேருந்து நிலையங்கள் செயல்படும் எனவும், சிறப்பு பேருந்துகளில் பயணிப்பதற்காக 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும் எனவும், பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையிலுள்ள https://www.tnstc.in/home.html என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.