ஆளுநர் உரையின் போது திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்த ஆளுநர் ஆர்.என்ரவி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போதே சட்டப் பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.
2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ஒளைவையாரின் பாடலோடு தனது உரையை தொடர்ந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை எனவும், உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப் படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது எனவும், சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் செயல்பட்டுள்ளார். திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் படிக்காமல் புறக்கணித்துள்ளார்.
அதுமட்டுமின்றி பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் பெயர்களையும் ஆளுநர் படிக்காமல் புறக்கணித்தார். அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது தவறு. உரையில் இடம் பெறாமல் ஆளுநர் சொந்தமாக சேர்த்து கொண்டவை அவை குறிப்பில் இடம் பெறாது என முதலமைச்சர் கூறினார்.
அரசு தயாரித்த, ஆளுநரால் இசைவளிக்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையை முறையாக படிக்காதது வருந்தத்தக்கது. ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன் எங்கள் எதிர்ப்பு எதையும் பதிவு செய்யவில்லை எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதலமைச்சர் பேசியக் கொண்டிருக்கும் போது ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் புறப்பட்டார். சட்டப்பேரவையில் அரசின் உரையில் பல பகுதிகளை தவிர்த்தற்கு, முதலமைச்சர் கண்டனத்தை அடுத்து பாதியில் வெளியேறினார்.