சட்டப்பேரவையில் ஆளுநரை அமர வைத்துக் கொண்டு முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ஒளைவையாரின் பாடலோடு தனது உரையை தொடர்ந்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும் போது திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்ற வார்த்தைகளை தவிர்த்திருந்தார். அவரின் உரை முடிந்த பிறகு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தமளிப்பதாக பேசினார். இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவை நிகழ்வுகள் முடியும் முன்னதாகவே பேரவையில் இருந்து கிளம்பினார்.
ஆளுநர் கிளம்பியதும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் உரை சம்பிரதாய உரையாக இருப்பதாகவும், எந்தவித பெரிய திட்டங்களும் இடம்பெறவில்லை என பேசினார்.
ஆளுநர் உரை வெற்று உரையாக இருப்பதாகவும், ஏமாற்றம் மட்டும் மிஞ்சுவதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை அடியோடு சீர்குலைந்து விட்டதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, பேரவையில் ஆளுநரை அமர வைத்து முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் மரபுக்கு எதிரானது எனவும் விமர்சனம் செய்தார்.