இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்களில் விளையாடுகிறது. அதன்படி நடைபெற்ற டி20 போட்டியில் 1-2 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தியா-இலங்கை இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறன. அந்த வகையில், முதலாவது ஒருநாள் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 373 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 113 ரன்கள், ரோகித் ஷர்மா 83 ரன்கள், சுப்மன் கில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கையின் கசுன் ரஜிதா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக தாசன் ஷானகா 108 ரன்களும், நிசங்கா 72 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 47 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.