மயிலாடுதுறை, ஜனவரி- 13;
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, அகராதனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் புகையில்லா பொங்கல் திருநாள் பண்டிகை பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜான்சி ராணி தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஐரின் ஜெயராணி இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் மாணவிகள் குலவிட்டு, பொங்கல் வைத்து கும்மி பாட்டு படித்து கும்மி கொட்டி மகிழ்ந்தனர். மேலும் மாணவ மாணவிகள் புகையில்லா போகியை கொண்டாடுவோம், பகையில்லா, புகையில்லா பொங்கலை பொங்கி மகிழ்வோம். சுற்றுச்சூழலை பாதுகாப்போம் ரப்பர், டயர், பிளாஸ்டிக் மற்றும் இதர நச்சுப் பொருட்களை தீயிட்டு கொளுத்துவதை நிறுத்துவோம் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு சீட்டுகளை கடக்கம் ஊராட்சியில் உள்ள வீடுகள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதைத்தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பள்ளியில் பொங்கல் வைத்த பொங்கல் மற்றும் கரும்புகளை வழங்கினர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்