திருமுல்லைவாசல் முதல் பழையாறு வரை பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்படுமா? என அப்பகுதி மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர். மயிலாடுதுறை சீர்காழி: திருமுல்லைவாசல் முதல் பழையாறு வரை பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்படுமா? என அப்பகுதி மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில் வர்த்தகம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வர்த்தகம் செய்வதற்காக கடல் அருகே வேதாரண்யம், பழையாறு முதல் சென்னை வரை பக்கிங்காம் கால்வாய் அமைத்து கடல் வழியாக வாணிபம் செய்துள்ளனர். இந்த கால்வாயினை அந்த பகுதியில் உள்ள உள்ளூர் மீனவர்களும் பயன்படுத்தி வந்துள்ளனர். காலப்போக்கில் பெரும்பான்மையானோர் கடல் வழியாக போக்குவரத்து மேற்கொண்டதன் காரணமாக பக்கிங்காம் கால்வாய் பராமரிக்கப்படாததால் செடி கொடிகள் மண்டி தூர்ந்து போய் காணப்பட்டது.
புதர்மண்டி கிடக்கும் பக்கிங்காம் கால்வாய் இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் பழையாறு முதல் திருமுல்லைவாசல் வரை உள்ள பக்கிங்காம் கால்வாய்கள் தூர்வாரப்பட்டது. இதையடுத்து திருமுல்லைவாசல், தொடுவாய், கூழையாறு, கொட்டாயமேடு, ஓலை கொட்டாயமேடு, தற்காஸ், பழையார் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஆபத்து காலங்களில் தங்களுடைய படகுகளை பக்கிங்காம் கால்வாயில் நிறுத்தி வைத்து பாதுகாத்தனர்.
இந்த நிலையில் மீண்டும் பக்கிங்காம் கால்வாயில் ஆங்காங்கே ஆகாயத்தாமரைகள் செடி, கொடிகள் மண்டி புதர் போல் காணப்படுகிறது. மேலும் கால்வாயில் பல்வேறு இடங்களில் மண் மேடுகள் உண்டாகி தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. மழைக்காலங்களில் மழை நீர் வடிய வழி இல்லாமல் ஊருக்குள் கடல் நீர்புகும் நிலை உள்ளது. இந்த கால்வாயை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து பழையார் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் நாகரத்தினம் என்பவர் கூறுகையில், ஆங்கிலேயர்கள் வாணிபம் செய்வதற்கு இந்த பக்கிங்காம் கால்வாயை வெட்டி இதன் மூலம் பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கால்வாய் பராமரிக்கப்படாததால் தற்பொழுது செடி,கொடிகள் மண்டி காணப்படுகிறது. எனவே அரசு வேதாரண்யம் முதல் பழையாறு வரை முறையாக தூர்வாரி இரு கரைகளையும் பலப்படுத்த வேண்டும் என்றார்.
அதே பகுதியை சேர்ந்த கே.எம். நற்குணன் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பக்கிங்காம் கால்வாய் மீனவர்களுக்கு அரணாக அமைந்துள்ளது. இந்த கால்வாய் தற்போது பராமரிக்கப்படாமல் கரைகள் வலுவிழுந்து காணப்படுவதால் மழைக்காலங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்து வருகிறது. தூர்வார வேண்டும் இதனை தடுக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி ஆழப்படுத்தி இரு கரைகளையும் பலப்படுத்த வேண்டும். இதனால் கால்வாயின் மூலம் மீனவர்கள் விரைவாக தங்களுடைய படகுகள் மூலம் கடலுக்கு செல்ல முடியும். மேலும் பேரிடர் காலத்தில் துறைமுகத்தில் படகுகளை இந்த பக்கிங்காம் கால்வாயில் நிறுத்தி வைத்து பாதுகாத்துக் கொள்ளலாம். எனவே அரசு திருமுல்லைவாசல் முதல் பழையாறு வரை பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.