0 0
Read Time:3 Minute, 50 Second

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் சிவன் கோவில் தெற்கு மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 80). பல்பொருள் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சாரதாம்பாள்(70). இவர்களுக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கலியபெருமாளும், சாரதாம்பாளும் இணைபிரியாமல் வாழ்ந்து வந்தனர். இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வருவார்கள்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலியபெருமாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். தனது கணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சாரதாம்பாள் மிகுந்த கவலை அடைந்தார். இதில் அவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரையும் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். கணவன்-மனைவி இருவரும் அங்கு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலியபெருமாள் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் தெரிய வந்தால் சிகிச்சை பெற்று வரும் சாரதாம்பாள் மிகுந்த வேதனை அடைவார் என்று கருதியும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டும் கலியபெருமாள் இறந்த தகவலை சாரதாம்பாளுக்கு தெரிவிக்காமல் அவரது குடும்பத்தினர் ஆக்கூர் கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.

இது எப்படியோ சாரதாம்பாளுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். இத்தனை ஆண்டு காலம் தன்னோடு இணைபிரியாமல் வாழ்ந்து வந்த தனது கணவர் தன்னை பரிதவிக்க விட்டு விட்டு சென்று விட்டாரே என்று சாரதாம்பாள் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அப்போது சாரதாம்பாளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சில நொடிகளில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். வாழ்வில் இணை பிரியாமல் இருந்து வந்த இந்த தம்பதியினர் சாவிலும் இணைபிரியாமல் ஒரே நாளில் இறந்ததை அறிந்து கலியபெருமாள் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.பின்னர் சாரதாம்பாள் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச்சென்ற கலியபெருமாள் குடும்பத்தினர், கலியபெருமாள் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே சாரதாம்பாள் உடலையும் அடக்கம் செய்தனர்.இணைபிரியாமல் வாழ்ந்து வந்த இந்த தம்பதியினர் சாவிலும் இணைபிரியாமல் அடுத்தடுத்து இறந்ததுடன் அருகருகே அடக்கமும் செய்யப்பட்டுள்ளது அந்த பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

நிருபர்: முரளிதரன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %