74வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. 25ந்தேதி அறிவிக்கப்பட்ட 106 பத்ம விருதுகளில் 6 விருதுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கிடைத்துள்ளது.
பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராமுக்கு பாரத ரத்னா, பத்மவிபூஷண் விருதுகளுக்கு அடுத்து நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பு பிடிப்பதில் வல்லுநர்களான வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் கூட்டாக பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் கே.கல்யாணம் சுந்தரம்பிள்ளை, பாலம் கல்யாண சுந்தரம், கோபால்சாமி வேலுச்சாமி ஆகிய தமிழர்களுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம விருது கவுரவத்தை பெறும் இந்த 6 தமிழர்களும் படைத்த சாதனைகள் என்ன என்பதை பார்ப்போம்.
இந்திய திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஞானக் குரலை வியாபிக்கச் செய்திருப்பவர் வாணி ஜெயராம். வேலூரைச் சேர்ந்த கலைவாணி என்கிற இந்த இசைவாணி 8 வயதிலேயே மேடை ஏறியவர். 1971ம் ஆண்டு தனது திரையிசைப் பயணத்தை தொடங்கிய வாணி ஜெயராம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இசைக்கு மொழி கிடையாது என்பதற்கு உதாரணமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, குஜராத்தி, ஹரியான்வி, அசாமீஸ், துலு, பெங்காலி என 12 மொழிகளில் பாடி தனது இனிய குரலால் இனிமை சேர்த்துள்ளார் வாணிஜெயராம். அபூர்வ ராகங்கள் படத்தில் இடம் பெற்ற ”ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்” போன்ற எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன்குரல் பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம். ரம்மியம் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தேடுபவர்கள் வாணி ஜெயராம் பாடிய பாடல்களை கண்ணை மூடி ஒருமுறை கேட்டால்போதும். தீர்க்க சுமங்கலி படத்தில் இடம்பெற்ற ”மல்லிகை என் மன்னன் மயங்கும்” இளமை ஊஞ்சாலாடுகிறது படத்தில் இடம்பெற்ற ”ஒரே நாள் உனை நான்” அகல் விளக்கு படத்தில் இடம்பெற்ற ”ஏதோ நினைவுகள்” என வாணி ஜெயராம் குரலில் நம் மனதை மயக்கும் பாடல்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம்.
தனது தெய்வீக குரலால் ஏராளமான பக்தி பாடல்களையும் பாடி ஆன்மீக உலகிலும் தனது இசை முத்திரையை பதித்தவர் வாணி ஜெயராம். மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது கொடுத்து கவுரவிக்கப்பட்ட வாணி ஜெயராமின் இசைப்பணிக்கு தற்போது பத்மபூஷண் விருது மகுடம் சூட்டியுள்ளது.
பாலம் கல்யாண சுந்தரம்
பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில் இந்தியா வந்தபோது அரசு சாராத இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் மற்றொருவர் பாலம் கல்யாணம் சுந்தரம். வாழ்க்கையில் சமூக சேவை செய்யாமல் சமூக சேவையையே தனது வாழ்க்கையாக மாற்றிக்கொண்ட பாலம் கல்யாண சுந்தரத்தின் தன்னலமற்ற சேவையை கண்டு வியந்த நடிகர் ரஜினிகாந்த், அவரை தனது வளர்ப்பு தந்தையாக தத்தெடுத்து சில காலம் தன்னோடு தனது வீட்டில் தங்க வைத்தார். 35 ஆண்டுகளாக பேராசிரியராக, நூலகராக பணியாற்றியபோது தான்பெற்ற ஊதியம் முழுவதையும் குழந்தைகளின் படிப்பிற்காகவும், சமூக தொண்டிற்காகவும் நன்கொடையாக வழங்கிவிட்டு தனது சொந்த செலவிற்காக இரவில் ஓட்டலில் சர்வராக வேலை பார்த்த கல்யாண சுந்தரத்தின் சமூக சேவையை கேள்விப்பட்டு உலகமே வியந்தது. ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர் என்கிற விருதை இவருக்கு வழங்கிய அமெரிக்கா, 30 கோடி ரூபாய் பரிசு தொகையையும் வழங்கியது. அந்த தொகையையும் ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்காக நன்கொடையாக வழங்கிவர்தான் பாலம் கல்யாண சுந்தரம். திருநெல்வேலி மாவட்டம் மேலக்கருவேலங்குளம் கிராமத்தில் பிறந்த அவர், சமூக தொண்டில் முழுமையாக தன்னை அர்ப்பணித்தால் திருமணம்கூட செய்துகொள்ளவில்லை. பாலம் என்கிற சமூக சேவை அமைப்பை நடத்தி வருவதால் பாலம் கல்யாணம் சுந்தரம் என்று அழைக்கப்படுகிறார். உலகில் இப்படியும் ஒரு தன்னலமற்ற மனிதரா என பாலம் கல்யாண சுந்தரத்தை பற்றிக் கேள்விப்பட்டு ஆச்சர்யம் அடைந்த அமிதாப்பச்சன், அவரது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க ஆசைப்பட்டார். இதற்காக கல்யாண சுந்தரத்துடன் தங்கியிருந்து அவரைப் பற்றி தெரிந்துகொண்டார். சமூக சேவையின் அடையாளமாக வலம் வரும் பாலம் கல்யாண சுந்தரத்திற்கு சிறந்த சமூக சேவைக்கான பிரிவில் பத்மஸ்ரீ விருதை அறிவித்து கவுரவித்துள்ளது மத்திய அரசு
வடிவேல் கோபால்- மாசி சடையன்
அமெரிக்காவிடம் கொட்டிக்கிடக்கும் தொழில்நுட்பங்களை பகிர்ந்து பெற பல்வேறு நாடுகள் போட்டிபோடுகின்றன. ஆனால் அந்த அமெரிக்காவே ஒரு யுக்தியை தெரிந்துகொள்ள இரண்டு தமிழர்களை தங்கள் நாட்டிற்கே அழைத்துவந்தது. அவர்கள்தான் வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன். அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் பைத்தான் வகை (மலைப்பாம்பு) பாம்புகளின் தொல்லை அதிகரித்தபோது, அவற்றை பிடிக்க அந்நாட்டின் உயிரியல் துறையினர் பைத்தான் சவால் ஒன்றையே நடத்தினர். உலகெங்கிலும் 1000 பாம்புபிடி வல்லுநர்கள் இந்த சவாலில் பங்கேற்றாலும் 200 பைத்தான்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. அப்போதுதான் செங்கல்பட்டு மாவட்டம் செந்நேரி கிராமத்தில் இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களான வடிவேல் கோபால், மற்றும் மாசி சடையனின் பாம்பு பிடி திறமையை அமெரிக்க நாட்டினர் கேள்விப்பட்டு அவர்களை தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்றனர். இருவரும் சேர்ந்து இரண்டே வாரங்களில் 14 பைத்தான் வகை பாம்புகளை பிடித்தனர். இதனால் வியந்துபோன அமெரிக்க உயிரியல் துறை அதிகாரிகள் தங்கள் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாம்பு பிடி யுக்தியை கற்றுக்கொடுக்கச் சொன்னார்கள். அதன்பின் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வடிவேல் கோபால்- மாசி சடையனுக்கு அழைப்புவர அங்கெல்லாம் சென்று கண்ணாடி வீரியன், ராஜநாகம் போன்ற கொடிய விஷம் கொண்ட பாம்புகளை பிடித்து பொதுமக்களின் பீதியை நீக்கினர். அவர்களின் சமூக சேவையை கவுரவிக்கும் வகையில் வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையனை கூட்டாக பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ளது மத்திய அரசு.
கே.கல்யாண சுந்தரம் பிள்ளை
பரதநாட்டிய கலையை நாடெங்கிலும் பிரபலப்படுத்த தனது வாழ்நாளை அர்ப்பணித்த, பரதநாட்டிய கலைஞரான கே.கல்யாண சுந்தரம் பிள்ளைக்கு கலைப் பிரிவில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பரதநாட்டியத்திற்கான இந்தியாவின் சிறந்த பயிற்சி மையங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்ரீராஜராஜேஸ்வரி கலாமந்திரை நிறுவியவர் கே.கல்யாண சுந்தரம் பிள்ளை. தஞ்சாவூரைச் சேர்ந்த அவர், பரதநாட்டியத்தை நாடெங்கிலும் பிரபலபடுத்துவதற்காக மும்பையில் குடியேறினார். அவரது கலைச்சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோபால்சாமி வேலுச்சாமி
தமிழகத்தை சேர்ந்த பிரபல சித்த மருத்துவரான கோபால்சாமி வேலுச்சாமிக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவ மத்திய ஆராய்ச்சி கவுன்சிலில் இயக்குநராக இருந்து அவர் ஆற்றிய சேவை, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுஷ் மருத்துவத்துறைக்கு ஆற்றிய சேவை ஆகியவற்றை பாராட்டி கவுரவிக்கும் வகையில் கோபால்சாமி வேலுச்சாமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.