மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்தகாரணத்தினால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் முளைத்தும், உளுந்து பயிர்கள் சுத்தமாக அழுகிய காரணத்தினாலும் திருக்கடையூர் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் பார்வையிட்டு வருகிறார்.
நெற்பயிர்கள், உளுந்து மற்றும் பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரண வழங்க வேண்டும் என்று விவசாய சங்கத்தின் சார்பில் திருக்கடையூரை சேர்ந்த ராமமூர்த்தி மன வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளார்.
ஏற்கனவே, நாற்று நட்டபோது பெரும் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகி பிறகு அரசின் நிவாரண தொகையை வைத்து மீண்டும் நடவு செய்தனர். தற்பொழுது அந்த நடவு செய்த பயிர்களை அறுவடை செய்யும் தருணத்தில் மீண்டும் கனமழையால் நெற்பயிர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன. இதுமட்டுமல்லாமல், அறுவடை செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பு உளுந்து அல்லது பயிர் அடிப்பது வழக்கம், தற்பொழுது உளுந்து மற்றும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முற்றிலும் அழுகிவிட்டன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 20% மட்டுமே அறுவடை நடந்து உள்ளது. இன்னும் 80 % அறுவடை செய்யும் தருணத்தில் உள்ள நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர் அதுமட்டும் அல்லாமல், கதிர் அறுக்கும் இயந்திரத்தை வயலிலே இறக்கி அறுவடை செய்வது கடினம் என்றும் கூறினார்கள்.
திருக்கடையூர் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் கனமழையின் பாதிப்பு குறித்து கேட்டபோது, நாங்கள் தற்பொழுது அறுவடை எவ்வளவு முடிந்து உள்ளது, இன்னும் எவ்வளவு அறுவடை செய்யாமல் உள்ளது என்பதையும், தண்ணீரில் மூழ்கி, உளுந்து பயிர்களும் அழுகி இருக்கும் நிலையை இன்று பார்வையிட்டு கணக்கெடுத்து வருகிறோம். இந்த பாதிப்பு குறித்த அறிக்கையை என்னுடைய தலைமைக்கு அனுப்புவேன் என்று தகவல் தெரிவித்தார்.
செய்தியாளர்:க சதீஷ்மாதவன்